தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஏ.சி. இயந்திரத்தை, அங்கிருந்து அப்புறப்படுத்தி தன்னுடைய பயன்பாட்டிற்காக, தன்னுடைய வீட்டினுள் பொருத்தியுள்ளார் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் என்கின்ற குற்றச்சாட்டால் மக்களிடையே அதிர்ச்சி பரவியுள்ளது.
தினசரி 500 வெளி நோயாளிகளையும், 300 படுக்கைகளைக் கொண்ட உள் நோயாளிகள் பிரிவினையும் கொண்டது தொண்டி சாலை வாணியங்குடியில் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. 2011ம் ஆண்டு நேரு பஜார் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த மாவட்ட தலைமை மருத்துவமனை இங்கு மாற்றப்பட்ட கையோடு, 2012ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியும் இங்கு துவங்கப்பட்ட்டது. சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டமையாலும், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவும் சிறப்பாக இயங்குவதாலும் மாவட்டத் தலைமை மருத்துவமனையான இங்கு தினசரி நோயாளிகளின் வருகை அதிகம்.
இங்குள்ள தரைதள ஐ.சி.யூ.வார்டில் நோயாளிகளின் தேவைக்காக 9 ஏ.சி.மெஷின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இங்குள்ள ஏ.சி.மெஷின்களில் ஒன்றை, இங்கிருந்து அப்புறப்படுத்தி தனது சொந்தப் பயன்பாட்டிற்காக, அரசு மருத்துவ அதிகாரிகள், அலுவலகர்கள் குடியிருப்பிலுள்ள தன்னுடைய வீட்டில் பொருத்தியுள்ளார் மருத்துவ அதிகாரி ஒருவர். இந்த விவகாரம் வெளியில் தெரிய வர, சமூக ஆர்வலர்களால் மாவட்ட நிர்வாகத்திற்கு புகாராகக் கொடுக்கப்பட்டுள்ளதால் பரப்பரப்பு நிலவி வருகின்றது.