
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி, அவரது மனைவி பாக்கியம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களது மகன் கவிசங்கர் சோகத்துடன் இருந்து வருகிறார்.
கொலை நடந்த வீட்டிற்கு மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசிமோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் திருப்பூர்,கோவை,நீலகிரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் நடந்த பின் கடந்த மூன்று தினங்களாக போலீசாரின் கட்டுப்பாட்டில் தம்பதிகள் வசித்த வீடு இருந்தது.
குற்றவாளிகளின் கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்த பின் கொலை நடந்த இடத்தில் உறைந்து கிடந்த ரத்தத்தை சுத்தம் செய்த போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த வீட்டை கொலையான தம்பதியின் மகன் கவி சங்கரிடம் ஒப்படைத்தனர். அப்போது கவி சங்கர் எனது பெற்றோர்களை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை நான் இந்த வீட்டுக்குள் செல்ல மாட்டேன் என்று கூறி வீட்டு சாவியை போலீசாரிடமே ஒப்படைத்தார். இதனால் பரபரப்பு அடைந்த போலீசார் இது குறித்து தங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.