
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர் சீர்காழி தர்மகுளம் பகுதியில் அடகுக் கடையும், நகைக் கடையும் நடத்தி வருகிறார். தன்ராஜ் தனது மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வரும் நிலையில், இன்று (27.01.2021) காலை 6 மணியளவில் வீட்டு வாசலில், இந்தியில் பேசி சிலர் அவரை அழைத்துள்ளனர். அப்பொழுது வீட்டின் கதவை தன்ராஜ் திறக்க, வெளியே நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று தன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு தன்ராஜின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் வந்தபோது அவர்களையும் அந்த மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் தன்ராஜின் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜும் அவரது மருமகளும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் வீட்டில் இருந்த 17 கிலோ தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்ற அந்த மர்ம கும்பல், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி காட்சிகளில் தாங்கள் சிக்கிவிடலாம் என எண்ணி சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதேபோல் கொள்ளையடித்த நகையுடன் மர்ம கும்பல் தன்ராஜின் காரிலேயே தப்பித்து சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கார் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சீர்காழி போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இந்நிலையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். அதேபோல் மற்ற இரு கொள்ளையர்களை எருக்கூரில் கைது செய்து அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ தங்கமும், 2 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.