தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளது. அதிலும் , "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்'' என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரம் ஆதீன விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று (04/05/2022) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "பல்லக்கில் தூக்கத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார். வரும் மே 22- ஆம் தேதி தான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடக்கிறது; அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கத் தடை விதித்ததை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்" என்று குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ''உயிர் போனாலும் பரவாயில்லை மீட்டே தீருவேன் என இருப்பதால் நீ வந்துருவியா அப்படி.. இப்படி.. என மிரட்டுகிறார்கள். இதுமாதிரி மிரட்டிக்கொண்டிருந்தால் இது விஷயமாக அமித்ஷாவையும், பிரதமரையும் சந்திக்க இருக்கிறேன். இதை தவிர்த்தால் நல்லது. இல்லையென்றால் சந்தித்து நடவடிக்கை எடுக்கவைப்பேன். எங்க கோவிலுக்கு நாங்கள் சென்றால் இவர்களுக்கு என்ன? இனிமேல் எனக்கு மிரட்டல் உருட்டல், கொலை மிரட்டல் வந்தால் பாரத பிரதமரைச் சந்திக்க தயங்கமாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.