தமிழக அரசு அறிமுகப்படுத்திய நடத்துனர் இல்லாத பேருந்து சேவைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மிகுந்து நிதிச்சிக்கலில் சிக்கித் தவிப்பதாக அமைச்சா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் நிதிச்சுமையை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக பணியாளர்களை குறைக்கும் பட்சத்தில் அரசின் நிதிச்சுமை குறையலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கோவை – சேலம் இடையே இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகளை நடத்துநர்கள் இல்லாமல் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த சேவை நேற்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இடை நில்லா பேருந்துகளில் புறப்படும் இடத்தில் இருந்து ஏறும் பயணிகளிடம் பேருந்து நிலைய வளாகத்திலேயே நடத்துநர் ஒருவர் பயணச்சீட்டுகளை விநியோகம் செய்து விடுவார் பின்னர் பேருந்து புறப்படுவதற்கு முன் அவர் பேருந்தில் இருந்து இறங்கி விடுவார். பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருப்பார். 4 இடை நில்லா அரசுப் பேருந்துகளுக்கு ஒரு நடத்துநர் என்ற விகிதத்தில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த முடிவுக்கு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொமுச பேரவை மாநில துணைச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், நவீனம் என்ற பெயரில் கண்டக்டர் பணியிடத்தை ஒழிக்கவும், ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு அஸ்திவாரமாகவும் இந்த பஸ்களை இயக்க அரசும், நிர்வாகமும் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். கோரிக்கையை ஏற்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கத்தினரையும் ஒன்று திரட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டி வரும் என்றார்.
இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை துவக்கியுள்ளனர். இந்த சேவை பயனளிக்காது. தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்கமுடியாது. இந்த சேவையை ரத்து செய்ய வேண்டும். நடத்துனர் இல்லாத பேருந்து சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், தமிழக அரசின் இத்தகைய புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.