ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வேட்பாளர்கள் பொதுமேடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது, "தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும். தமிழக முதல்வருக்கு ஈரோடு மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது. எனவே வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் ஒத்துழைப்போடு திட்டங்கள் எளிதாக கொண்டுவரப்படும். கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்வாட் வரி முழுமையாக நீக்கப்பட்டது. நான் ஈரோடு மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன். எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். மகன் பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது" என்றார்.