கடந்த 2017 பிப்ரவரி 15 ந் தேதி தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்த போது 16 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் தொடங்கிய போராட்டம் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என 22 நாட்கள் தொடர் போராட்ட திருவிழா நடத்தினார்கள்.
அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் திட்டம் கைவிடப்படுவதாக உத்திரவாதம் கொடுத்ததால் முதல்கட்ட போராட்டம் 22 நாளில் முடிவுக்கு வந்தது. இதே காலகட்டத்தில் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு ஆகிய ஊர்களிலும் போராட்டம் நடந்தது.
ஆனால் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மறந்து ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்கியது. அப்போராட்டம் 174 நாட்கள் தொடர்ந்தது. அப்போது அந்தப் போராட்டத்தின் போது வடகாடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார்கொல்லை, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சியால் அமைக்கப்பட்டுள்ள ஆழமான ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக அகற்றி நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கணேஷ் எழுதிக் கொடுத்தார்.
இப்படியே 196 நாட்கள் போராட்டம் நடந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆலங்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 2019 ம் ஆண்டு காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படாது என்றும் கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது ஜூன் 10 ந் தேதி மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 புதிய எரிவாயு கிணறுகளுக்கான டெண்டர் விட்டுள்ளது. அதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு என்று ஒரு இடமும் மன்னார்வளைகுடா பகுதிகளையும் இணைத்திருந்தது. இந்த தகவல் வெளியான நிலையில் கருக்காகுறிச்சி வடதெருவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்கு எரிவாயு எடுக்க வராதே என்று கோட்டைக்காடு பகுதி விவசாயிகள் முதல்கட்டமாக அரை நிர்வாண போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கருக்காகுறிச்சி விவசாயிகள் ''தமிழக அரசு இத்திட்டம் வராமல் தடுக்கும் வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்கும்'' என்கின்றனர்.
தமிழகத்தை மீண்டும் போராட்டக்களமாகிவிட்டது மத்திய அரசு.