கிட்டத் தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, தமிழக டெல்டா விவசாயிகளின் வயிற்றில் மீண்டும் புளியைக் கரைத்திருக்கிறது ஹைட்ரோ கார்பன் பூதம். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ஏற்கனவே 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, மேலும் ஒரு ஏலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள பரப்பளவு 3,200 ச.கி.மீ. ஆனால், இப்போது 5-வது உரிமம் வழங்கப்படவுள்ள நிலப்பரப்பு 4,064 ச.கி.மீ. அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மத்திய அரசு கச்சிதமாகத் திட்டமிட்டுள்ளது. 5-வது ஏலத்திற்கான அறிவிப்பு, ஜன.15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5-வது திட்டம் புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்தப் பகுதிகள்தான் மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
‘ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தின்மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என அஞ்சுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, மக்களின் கருத்து கேட்பது அவசியம். ஆனால், இப்போது கருத்து கேட்க வேண்டாம், சுற்றுச் சூழல் துறையின் அனுமதியும் அவசியம் இல்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.