தமிழகம் முழுவதும் நாளை (3/5/2022) புனித ரமலான் பண்டிகையை இஸ்லாமிய சமூகத்தினர் விமர்சையாக கொண்டாடவிருக்கிறார்கள். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், "இனிய நெஞ்சினர் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஈகைத் திருநாளை அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வாய்ப்பு இந்த ஆண்டு கிடைத்துள்ளது. இது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கின்றது. இதற்காக முதற்கண் ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
ஈகைத் திருநாள் பாவங்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பரிசுத்தமாகி இருப்பதின் அடையாளமாகக் கொண்டாடப்படும் திருநாள் ஆகும். ஏனெனில் நபிகளார் சொன்னார்கள் “நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்”
(ஆதார நூல்: அஹ்மது)
புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல், உண்ணாமல், உணர்வுகளை கட்டுப்படுத்திப் பெற்றுள்ள மார்க்கப் பயிற்சியை ஆண்டு முழுவதும் மனத்திற்கொண்டு அறநெறிப்படி வாழ வேண்டும் என்பதே இறைவனுக்கு விருப்பமான வாழ்வாகும். இஸ்லாமிய இறை வணக்கம் என்பது தொழுகை, நோன்பு இவற்றோடு மட்டும் நின்று விடுவதல்ல. பிற மனிதர்களின் நலன் காக்கவும், அவர்களின் சிரமங்களைப் போக்கவும் பாடுபடுவது கூட இஸ்லாத்தின் பார்வையில் இறைவணக்கமாகவே உள்ளது.
ஈகைத் திருநாள் அன்று ஏழைகளுக்கு தானம் வழங்கி விட்டுத் தான் முஸ்லிம்கள் ஈத் தொழுகைக்குச் செல்ல வேண்டும். இல்லாதோரும் மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற சமநீதி தத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவே பித்ரா என்னும் இந்த தர்மம் இருப்போர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஈகைத் திருநாள் ஒரு மாதக் காலம் நோன்பிருந்து இறைவனை வணங்கியதற்கு இறைவன் மகத்தான கூலியைக் கொடுக்கும் தினமாகும். இந்த நாளில் நமக்காக நமது குடும்பத்தினருக்காக மட்டுமில்லாமல் நம் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வில் சுபிட்சம் ஏற்படவும் நல்லிணக்கம் தழைத்தோங்கவும் பிரார்த்தனைப் புரிவோம்;.
தொன்று தொட்டு இந்த நன்னாளில் நமது முஸ்லிமல்லாத அண்டை வீட்டார், நண்பர்கள் என அனைவருக்கும் நமது நட்பின் அடையாளமாக அளிக்கும் விருந்தை சிறப்பாக இந்த ஆண்டும் அளித்து நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோமாக. வெறுப்புணர்வையும் பகையுணர்வையும் புறந்தள்ளும் மானுட நேயமே நமது முகவரியாகட்டும். ஈகைப்பெருநாளில் இறைத்தூதர் வழியில் இதயங்களைக் கொண்டாடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.