Skip to main content

"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்!" -ஹெச்.ராஜா

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
hraja in salem

 

சேலத்தை சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ கே.என்.லட்சுமணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை நலம் விசாரிப்பதற்காக சேலம் வந்திருந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:


கரோனாவால் இந்தியாவில் 50 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என உலக நாடுகள் கணித்திருந்தன. இந்திய அரசு, சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததால் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் மரணங்கள் 2.6 சதவீதமாக உள்ளது. 

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இழப்பில் இருந்து மீண்டு வரும். வேலையிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்குள் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும். 

 

 


இந்தியாவில் தற்போது தினமும் 2 லட்சம் பிபிஇ உடைகளும், 2 லட்சம் என்95 முகக்கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பிசிஆர் மற்றும் துரித பரிசோதனை கருவிகளையும் நாமே தயாரிக்கும் வகையில், இந்திய மருத்துவத்துறை தற்சார்பு கொள்கையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். 

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரசின் சாதனைகள் கடிதங்கள் மூலமாக 10 கோடி வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க உள்ளோம்.


 

nakkheeran app




சீன எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து திருமாவளவன், தன் இணையதள பக்கத்தில் இந்திய&சீன எல்லையில் கோபேக் மோடி என பதிவிட்டுள்ளார். ஒரு போலியான படத்தை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் ஒரு தீய சக்தி. அவர் பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.

திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும், அனைத்து சமூகத்தினரையும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். நல்ல மனநிலையில் உள்ள தலைவர்கள் யாருமே அங்கு இல்லை. புதிதாக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முருகனுக்கு வாழ்த்து சொல்லும் அரசியல் நாகரீகம்கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.