44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லாததால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை அடையார் பேருந்து நிறுத்தத்தில் உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் மோடி படத்தை பாஜகவினர் ஒட்டி சென்ற நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், மோடியின் படம் ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படாத வண்ணம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் சென்றுகொண்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''எல்லா மாநிலங்களையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார் பிரதமர் மோடி. மத்திய விளையாட்டுத்துறை அனுமதியின்றி எப்படி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த முடியும்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.