நக்கீரன் ஆசிரியர் விவகாரத்தில் இன்னொரு மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் இன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியருக்காக வாதாடி அசத்தி விட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து என் ராம் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கறிஞராக அவர் இல்லை என்ற போதிலும், நக்கீரன் கோபால் வழக்கில் சில கருத்துக்களைக் கூற விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதைப் பரிசீலித்த நீதிபதி கோபிநாத், ஊடக பிரதிநிதியாக அவரை வாதிட அனுமதித்து உத்தரவிட்டார். அங்கேயே அரசுத் தரப்பு தோற்று விட்டது. காரணம், இந்து ராம் எடுத்து வைத்த பாயிண்ட்டுகள்.
இந்து ராம் வாதிடும்போது 3 முக்கியமான அம்சங்களை எடுத்து வைத்தார். நக்கீரன் இதழில் வெளியான சர்ச்சைக்குரியதாக கூறப்படும் கட்டுரைக்கும், தேசதுரோக வழக்குக்கான அரசியல் சட்டப் பிரிவு 124க்கும் சம்பந்தமே இல்லை.
இந்தியாவிலேயே இந்தப் பிரிவில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். ஆனால் இந்தப் பிரிவை பிரயோகிப்பதற்கான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை.
இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய கோர்ட் உத்தரவிட்டால் அது நாட்டுக்கே தவறான முன்னுதாரணமாகி விடும். அதற்கு சென்னை கோர்ட் காரணமாக அமைந்து விடக் கூடாது. பத்திரிகையில் வரும் கட்டுரைகளுக்கு 19 (1) ஏ சட்டப் பிரிவு பாதுகாப்பு தருகிறது. மேலும், பத்திரிகையில் வரும் படங்களுக்காகவும் நடவடிக்கை எடுக்க சட்டப்படி முடியாது. ஆளுநர் பதவியை தேவையின்றி இதில் இழுத்துள்ளனர் என்று வாதிட்டார் இந்து ராம்.
அவரது வாதத்தை குறித்துக் கொள்வதாக நீதிபதி கோபிநாத் தெரிவித்தார். மேலும் நீதிபதி அரசுத் தரப்பிடம் கேட்ட பல கேள்விகளுக்கு சரியான பதிலை அரசு தரப்பு வழக்கறிஞரால் தர முடியவில்லை. இதுவும் நக்கீரன் ஆசிரியருக்கு சாதகமாக தீர்ப்பு வர முக்கியக் காரணமாகும்.