
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன் பேசுகையில், ''வெள்ளைக்காரங்க வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை சொன்னார்கள். அதற்குப் பிறகு கம்யூனிஸ்ட்காரர்களும், காங்கிரஸ்காரர்களும் நமது இந்தியாவின் வரலாற்றை திருத்தினார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த மாதிரியான குரூப் தமிழகத்தினுடைய வரலாறை, பண்பாட்டை கலாச்சாரத்தை சிதைப்பதற்கு எத்தனிக்கிறார்கள். அது நடக்காது. தமிழகம் ஆன்மீக பூமி. மக்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள். இப்பொழுது மட்டுமல்ல சங்க காலம் முதற்கொண்டு தமிழ் மக்கள் ஆன்மீகத்தில் ஒன்றிணைந்து பிறந்தவர்கள். ஏதோ ஒன்று இரண்டு பேர் சொல்வதற்காக ஆன்மீகம் தமிழ்நாட்டில் இல்லை என்பது நடக்காது.
ராஜராஜ சோழன் இந்து தானே. இந்து தமிழன் ஒன்னு தான். இந்து வேற தமிழன் வேறையா? தமிழக முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்லவில்லை, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. நாங்கள் வேல் யாத்திரை நடத்தினோம். தமிழகம் முழுவதும் பிரபலமானது. அப்பொழுது அவர் ஆட்சிக்கு வருவதற்கு குதித்துக் கொண்டிருந்தார். எங்க மக்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடாமல் நம்மை புறக்கணித்து விடுவார்களோ என்று நான் எந்த இடத்தில் வேல் பிடித்தனோ அதே திருத்தணிக்கு சென்று வேலை பிடித்தார். அவர் பிடித்ததோடு மட்டுமல்லாமல் அவரது மகனும் பிடித்தார். அவர் மட்டுமல்லாது அவரது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் கூட வேலை பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். தேர்தல் முடிந்த பிறகு, ஓட்டை எல்லாம் வாங்கிய பிறகு அதற்கு உல்டாவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆ.ராசா மாதிரி ஆட்கள் இன்றைக்கு இந்து மக்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தனக்கு எதிராக இருந்ததை அறிந்துகொண்ட முதல்வர் தற்பொழுது தாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று தெரிவித்து வருகிறார். ஆனால் திமுக ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு பொழுதும் ஆபத்து வரும்போது அந்த நேரத்தில் நாங்கள் ஆன்மீகத்துக்கு ஆதரவானவர்கள் என்று வெளி உலகத்துக்கு காட்டிக் கொள்கிறார்கள்'' என்றார்.