கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.
இதன் தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தச்சூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட, மற்றொரு தரப்பு ‘ஜெய் பீம்’ என முழக்கமிடும் காணொளி வெளியானது.
அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கோடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கர்நாடகாவில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.