Skip to main content

குண்டர் சட்டத்தை எதிர்க்கும் தணிகாசலத்தின் தந்தை மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு அவகாசம்!

Published on 08/06/2020 | Edited on 09/06/2020
highcourt in dhanikachalam

 

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும், மேலும் இரண்டு வார அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா  தொற்றுக்கு  மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாகவும், சித்த மருத்துவர் தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், அவர் மீது மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர்  குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாசலத்தின்  தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவக் கவுன்சிலில் உரிய சான்றிதழ் ஏதும் இல்லாமல் தணிகாசலம் மருத்துவம் பார்த்ததாக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

 


தணிகாசலத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வைத்தியர் குடும்பத்தில் பிறந்து மருத்துவம் பார்த்தாலும், போலி மருத்துவர்தான் என உச்ச நீ்திமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக் காட்டினர். மேலும், பரம்பரை மருத்துவர் என வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு எந்த மதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தணிகாசலத்தின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, கரோனாவை தடுக்கவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் குடிக்கலாம், நிலவேம்பு குடிநீர் குடிக்கலாம் என பரிந்துரைத்தார். அவர் தவறான எந்த மருத்துவ ஆலோசனையும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார். குற்றப்பிரிவு காவல்துறை பதிந்த வழக்கை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், தேவையில்லாமல் உள்நோக்குடன் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்