நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ''சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவில் 8 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதியரசர் ஏ.கே. ராஜன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட இக்குழு, உரிய புள்ளிவிவரங்களை ஆய்வுசெய்து ஒரு மாதத்தில் அரசுக்கு அறிக்கை தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.