திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்துள்ள கோலடி ஏரியைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த வகையில் அங்கு சில குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (24.10.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், “அந்த பகுதியில் 20 வருடங்களுக்கு மேல் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என அவர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கடந்த 20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும். 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112 ஏக்கராகச் சுருங்கிவிட்டது” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், “அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உரியப் பட்டாக்களைப் பெற்று வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனால் கோபடைந்த நீதிபதிகள், “கடும் மழைக் காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தான் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளோம். இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்படுகிறார்" என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு (02.11.2024) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.