Skip to main content

இந்து முன்னேற்ற கழகம் தொடர்ந்த வழக்கு; மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

High court Orders to take action on shops which open in tirupur


திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

 

மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Announcement of Communist Party of India candidates

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார். திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர்.