முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நட்ராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதனால் வேறு ஒரு நீதிபதி முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நட்ராஜின் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.