மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு அரசே எங்களை தள்ளுகிறது என்கிறார்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஒட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்கள்.

"பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை சுமூகமாக தீர்பதாக உறுதி கொடுத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறார்கள்" என கூறும் ஊழியர்கள் இன்று (நேற்று) ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய சங்க செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச செயலாளர் ஆறுமுகம் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே அரசு தொடங்க வேண்டும் அதே போல் அனைத்து போக்குவரத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீது காலதாமதமின்றி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்கள்.