
ஈரோடு காளை மாட்டு சிலை சிக்னலில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் ரயில்வே பாலத்தில் கனரக வாகனங்கள் பாரம் தாங்காமல் வடிகாலுக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி சேதமாகி சில இடங்களில் சாலையும் சிதலமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டும், வாகனங்களும் வடிகால் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்வே துறை மூலம் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பால சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. அதன்படி ரயில்வே பாலத்தின் கீழ் புற சாலை மற்றும் வடிகால் சீரமைப்பு பணி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது, 'காளை மாட்டுச் சிலையில் இருந்து செல்லும் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் எப்போதும் போல அந்த வழியாக செல்லலாம். பூந்துறை சாலை, கரூர் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நாடார் மேட்டில் இருந்து சாஸ்திரி நகர் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் சென்று சென்னிமலை சாலை வழியாக ஈரோடு செல்லலாம். கரூர் சாலை மற்றும் பூந்துறை சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மட்டும் கொல்லம்பாளையம் ரயில்வே பாலம் வழியாக செல்லலாம். இந்தப் பணியை 30 நாட்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். கனரக வாகனங்கள் திருப்பி விடப்படும் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்' என்றனர்.