திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகத்துக்குரிய தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.
அதன்பேரில் மோகன்ராம், சாமி ரவி, திலீப், சத்யராஜ், சுரேந்தர், சிவ குணசேகரன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, ராஜ்குமார், சண்முகம், நரைமுடி கணேசன் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி கடந்த வாரம் துவங்கி 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் டில்லி தடய அறிவியல் துறை அதிகாரி ஜான்மோசஸ் முன்னிலையில், சிவா என்பவரிடம் உண்மை கண்டறியும் சோதனை மீண்டும் நேற்று நடந்து முடிந்தது. சோதனை தொடர்பான அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க இருக்கின்றனர்.