மதுரை ஆதீனம் புதுக்கோட்டையில் நடந்த ஒரு பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’காவிரி நீரை பெற வேண்டும் என்று ஆளும் கட்சி ஒரு பக்கமும் எதிர்கட்சிகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் போராடி வருகிறார்கள். மாணவர்கள் இளைஞர்கள் எல்லாரும் போராடினாலும் அடுத்த தேர்தலில் பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி தண்ணீர்
தமிழகத்துக்கு வராது. காரணம் கர்நாடக மக்கள் விடமாட்டார்கள். அதனால் மக்களுக்குள் புரிந்து கொள்ளும் விதமாக பேசி அவர்களின் மனதை மாற்ற வேண்டும். மக்கள் சமாதானமானால் மட்டுமே காவிரி தண்ணீர் தமிழகம் வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் ராணுவத்தை வைத்து தண்ணீரை திறந்து வரலாம். அதனால தான் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்கிறார்கள். காவிரிக்காக கர்நாட மக்களிடம் பேச்சு நடத்த அரசு அழைத்தா்ல் நாங்கள் செல்ல தயாராக உள்ளோம்’’என்றார்.
எச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் பெண்களுக்கு எதிராக பேசிவருகிறார்களே..
என்ற கேள்விக்கு, ’’எங்களைப் பொருத்தவரை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரபு நாடுகளைப் போன்ற கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும். பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனை கையை காலை வெட்டும் சட்டம் வேண்டும். அரசியல்வாதிகள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.
பேராசிரியர் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்திருப்பது பற்றிய கேள்விக்கு, ’’இது ஒன்று தான் வெளியே தெரிந்திருக்கிறது. ஆனால் பல சம்பவங்கள் தெரியாமலே உள்ளது. மாணவிகள் பாதிக்கப்படுவதால் இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வாய்ப்பு உருவாகி உள்ளது’’என்று தெரிவித்தார்.