நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட மண் சரிவினால் உயிர், உறவு, வீடு, உடமைகளை இழந்து நிர்கதியாய் நிற்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மலை மேல் கிராமங்களுக்கு போகும் வழிகளை காணவில்லை அதனால் உதவிகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல வீடுகள் சரிந்து கொட்டிய மண் நிறைந்து அகற்ற முடியாமல் தவிக்கிறார்கள். ஓங்கி உயர்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் வெளியூர்களில் இருந்த இளைஞர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் வந்து தங்கி உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த இளைஞர்களே உதவி செய்ய வருபவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் உள்ளனர். இந்தநிலையில்தான் பெறும் மண்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒவேலி சைமுதீன் கடந்த 8 ந் தேதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அதேபோல மற்றொரு இளைஞர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோலதான் என்றும் அன்புடன் இளைஞர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிக்குழுவுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்த ரமேஷ்லால் என்ற இளைஞர் ஒரு மீட்பு பணியின் போது மரங்களை வெட்டி அகற்றும் பணியில் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எதிர் திசையில் நின்று மற்றொரு இயந்திரம் இயக்கப்பட்டவருக்கு ரமேஷ்லால் நிற்பது தெரியவில்லை. வேகமாக இயங்கிய இயந்திரம் ரமேஷ்லாலின் வயிற்றில் அறுத்து குடல் சரிந்துவிட்டது. உடனே துணியை வைத்து குடலை உள்ளே வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

உடனே நண்பர்கள் கேரளாவில் உள்ள டி.எம்.விம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இன்று காலை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுமார் ரூ 2 லட்சம் வரை செலவாகும் என்பதால் கையில் ஒரு பைசா இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இது குறித்து அவரது நண்பர்கள் கூறும் போது..
நல்ல மக்கள் சேவகர். மக்களுக்கு பாதிப்பு என்றதும் உடனே களப்பணியில்இறங்கினார். தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் மக்களுக்கு உணவுக்கு கொடுத்துவிட்டு களப்பணியில் இறங்கினார். ஒவ்வொரு இளைஞரும் தங்கள் சேமிப்பை மக்களின் நிவாரணத்திற்காக செலவிட்டு கையில் பணமில்லாமல் நிற்கிறோம். ரமேஷ்லாலுக்கு இப்படி ஒரு விபத்து. அடுத்தடுத்து சோதனைகள். எப்படியும் நண்பர் ரமேசை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டோம். நல்ல உள்ளங்கள் நிச்சயம் உதவிகள் செய்வா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக, கேரளா அரசுகள் கூட மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டால் போதும் என்றனர் கண்ணீர் திரள. ஒரு நல்ல மக்கள் சேவகனை காப்பாற்ற உதவிகள் செய்ய மனமுள்ள நல்ல உள்ளங்கள்.. கீழே உள்ள எண்களில் தொடர்பு கொண்டு விபரம் அறிந்தே உதவலாம்.. ஆனந்த் - 9527119747, சிவா மாஸ்டர் - 6383748489, சாந்தகுமார் - 9585877853. இந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்..