சேலத்தில் திருட்டு, வழிப்பறி, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தனுஷ் (21). அம்மாபேட்டை வித்யா நகர் 8 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மாது மகன் விக்ரம் (20). தாதகாப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்த சம்பத் மகன் மணிமாறன் (32). இவர்கள் மூன்று பேரையும் சேலம் மாநகர காவல்துறையினர் ஜூலை 28ம் தேதி ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இவர்களில் விக்ரம், தனுஷ் ஆகியோர் மீது இருசக்கர வாகனத் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன. இவர்களில் தனுஷ் மீது முதல் முறையாகவும், விக்ரம் மீது இரண்டாவது முறையாகவும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மற்றொரு ரவுடியான மணிமாறன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை தாதகாப்பட்டி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் விற்ற லாட்டரி சீட்டுக்குப் பணம் விழாதபோது அவரிடம் சீட்டு வாங்கிய நபர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர்களைக் கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்தன. இதையடுத்து, பொது அமைதியைக் கருதி இவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் மீது மூன்றாவது முறையாகக் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.