அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்து ஆசிரியர் ஒருவர் கோரிக்கை வைத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை முடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் புறப்பட தயாரானார். அப்போது பள்ளி ஆசிரியர் சரவணன் என்பவர் அந்த காரை வழிமறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சு கொடுத்தார். அவரிடம் அந்த ஆசிரியர், ‘நீட், ஜே.இ.இ. தேர்வுக்கு ஏற்றவாறு மத்திய அரசு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டது.
ஆனால், அந்த நுழைவு தேர்வுக்கு மற்ற பாடத்திட்டங்களை வகுக்காத காரணத்தால் தமிழக மாணவர்கள் நீட் தேர்விலும், மற்ற தேர்விலும் பலர் வெற்றி பெற முடியவில்லை’ என்று வேதனையோடு கூறினார். மேலும் அவர், ‘தமிழ்நாடு பாடத்திட்டத்தை நுழைவு தேர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், ‘நீங்கள் கோரிக்கை வைத்த அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.