தமிழகத்தில் பரவிவரும் கரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளன. பல இடங்களில் படுக்கை வசதிகள் இல்லாமல் மருத்துவமனைகளின் வராண்டாகளிலும் காலியாக இடம் இருக்கக் கூடிய எல்லா பகுதிகளையும் நோயாளிகளுக்கான சிகிச்சை தரும் இடமாக மருத்துவமனைகள் மாற்றியுள்ளன. தொடர்ந்து நோய் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற மருத்துவமனைகள் முயற்சிசெய்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவதற்கான இடமில்லாததால், அவர்கள் வீடுகளில் இருந்தபடி தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அப்படி சிகிச்சை பெற்றுவரும் பகுதிகளில், குறிப்பாக திருச்சி நகர் பகுதிகளில் குமரன் நகர், அண்ணாமலை நகர், சீனிவாசன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளை மாநகராட்சி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தகவல்களை வைத்து மூடியுள்ளனர். கடந்த வாரத்தில் 40 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த நிலையில், அவை 70 பகுதிகளாக இன்று உயர்ந்திருக்கிறது.