சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதே சமயம் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்த சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நேற்று முன் தினம் (11-01-24) வருகை தந்தார். அங்கு முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். பின்னர் துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என். ரவியை பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்தது தொடர்பாக ஆளுநருக்கு அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ஆளுநர் மாளிகை அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருங்கிய நண்பரா?. துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்தித்தது தனிப்பட்ட முறையிலா? அல்லது தமிழ்நாடு ஆளுநராகவா?. அல்லது, ஜாமீனில் வெளியே உள்ள ஜெகநாதன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது ஆளுநருக்கு தெரியுமா?.
மேலும், சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் ஜெகநாதன் மீது தொடரப்பட்ட வழக்கு விபரங்கள் ஆளுநர் ரவிக்கு தெரியுமா?. குற்றம் சாட்டப்பட்ட ஜெகநாதனை சந்திப்பதை ஆளுநர் வழக்கமாக வைத்திருந்தாரா? அல்லது இது தான் முதல் முறையா?. அரசுப் பணத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜெகநாதனை போலீஸ் கைது செய்தது ஆளுநர் ரவிக்கு தெரியுமா? தெரியாதா?. ஜெகநாதன் நிறுவனமான பூட்டர் அறக்கட்டளையின் கணக்குகளை சரிபார்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்றாரா? அல்லது பெரியார் பல்கலைக்கழக பதிவுகளை சரிபார்ப்பதற்காக ஆளுநர் சென்றாரா? பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் மோசடிக்கு பல்கலைக்கழக வேந்தரான ஆர்.என்.ரவி பொறுப்பேற்பாரா? அரசு ஊழியர் மீது கிரிமனல் வழக்கு நிலுவையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்பது ஜெகநாதனுக்கு பொருந்துமா? ஜாமீனில் வெளியே உள்ள ஜெகநாதனுடன் ஆளுநர் எத்தனை முறை பேசினார்? எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் எழுப்பிய கேள்விகளுக்கு 30 நாள்களுக்குள் பதில் தர வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார்.