நாட்டின் 76வது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி (26.01.2025) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தைப் பறைசாற்றும் சாகசங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.
அதே சமயம் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது. அதே சமயம் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வி.சி.க., சி.பி.எம்., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டும் குடியரசு தினத்திற்கான ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.