
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஒரே மையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இது குறித்து விளக்கம் அளித்தார்.
பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.
ஏற்கனவே நில அளவர் தேர்வில் காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.