தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் நேற்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
- “திராவிட மாடல் காலாவதியானது..” - ஆளுநர் ரவி பேச்சால் சர்ச்சை
- “திராவிட மாடல் காலாவதியானது அல்ல கற்பனையானது” - எச். ராஜா
அப்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், “ஆளுநர் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தக்கூடியவர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக திராவிட மாடல் செயல்படுகிறது. ஒன்றியம் என கூப்பிடுவதே தவறு. ஆளுநர் மிக சரியாக அவரது கடமையைச் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களைத் திராவிட முன்னேற்ற கழக அரசும், இங்கு இருக்கக்கூடிய பிரிவினைவாத சக்திகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி அவர் அரசியல் சாசனத்தின்படி தன்னுடைய கடமையை செய்துவருகிறார். அவர் தேசியத்தின் சார்பாக பேசுகிறார். ஆளுநர் தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். தமிழ்நாட்டில் பிரிவினை சக்தி, ஊழல் சக்தி, தமிழ்நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த சக்திகள் வீழ வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். ஆளுநர் என்பவர் அப்படி தான் நினைக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.