தூத்துக்குடி மாவட்டம், வேம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). பி.காம் வரை படித்த இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும், அவர் தனது குடும்பத்துடன் தான் வேலை பார்த்து வந்த அதே பகுதியில் தங்கியும் வந்துள்ளார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி (25)க்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பி.எஸ்.சி பட்டதாரியான காயத்ரி சிறுசேரியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
திருமணமான இளம் தம்பதியினர், கடந்த 3 மாதங்களாக பெருங்களத்தூர், புத்தர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு, பணிக்கு சென்ற சரவணன் நேற்று காலை 2 மணி போல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டினுள் உள்ள அறையில் காயத்ரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த சரவணன், செய்வதறியாது கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வருவதற்குள், சரவணனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து பீர்க்கன்காரணை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதியினரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு காயத்ரி தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “கணவர் சரவணன் தினமும் குடிப்பதாகவும், கெட்ட பழக்கங்கள் அதிகம் இருப்பது தனது குடும்பத்தினருக்கு தெரியவந்தால் கஷ்டப்படுவார்கள். எவ்வளவு சொன்னாலும், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. இனிமேல் அவருடன் வாழ்வது முடியாது” என்று எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.