Skip to main content

கோடிக்கணக்கில் மோசடி; சிக்கிய அரசு அதிகாரிகள்!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

Government officials arrested for fraud worth crores
கனிசுந்தரம் - மஞ்சள் நாதன் - சூர்யபிரகாஷ்

கரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து என்பவரிடம் போலியான பணி நியமன ஆணை மற்றும் சோலார் பேணல் திட்டம் கொள்முதல் பெறுவதற்கான ஆணைகளை கொடுத்து கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், பவானிசாகரில் பிடிஓவாக பணியாற்றும் கார்த்திகேயன், பெங்களூரைச் சேர்ந்த பூபதி செல்வராஜ், திருப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார், ராஜ்குமார், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த் நரேந்திரநாத் சிங்கா, பார்த்தா பரத்வாய், சைவந்தர் உள்ளிட்ட 8 பேர் ரூ.31.20 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.இந்த வழக்கில் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சூர்யபிரகாஷ் மேலும் ஒரு புதிய வழக்கில் சிக்கியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடன் சூர்யபிரகாஷ் நெருங்கிப் பழகி வந்துள்ளார். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று பழனிசாமிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், எனது நண்பர்களான  சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், தொழிலாளர் நலத்துறை ஆணையர் மஞ்சள்நாதன், நீலகிரி மாவட்ட வட்டாட்சியர் கனிசுந்தரம் ஆகியோருடன் இணைந்து கூட்டாக தொழில்  செய்து வருகிறேன். ஊட்டியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான 24.71 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருகிறது. அதனை ரூ.10 கோடிக்கு வாங்கி பின்னர் 15 நாட்களுக்குள் பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் ரெட்டி என்பவருக்கு அதிக லாபத்தில் விற்று விடலாம் என்று பழனிசாமியிடம் கூறியுள்ளார். இதனை முழுவதுமாக நம்பிய பழனிசாமி வங்கிக் கணக்கு மூலமாகவும், பணமாகவும் பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.9.50 கோடி கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பழனிசாமியின் பெயருக்கு ஊட்டியில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் ரமேஷ் ரெட்டி இடத்தை வாங்க மூன்று மாத காலம் அவகாசம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி தனது பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மஞ்சநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் பணத்தைத் திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் ஒப்புக்கொண்டபடி பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பழனிசாமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சூர்யபிரகாஷ், கணி சுந்தரம், மஞ்சள்நாதன், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். அதில் சூர்யபிரகாஷ், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக  இருக்கும் மற்றவர்களை கைது செய்யும் பணிகள் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்