Skip to main content

மகளிர் காவல் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்ட அரசு ஊழியர்!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

Government employee involved in riot before women's police station

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. உளுந்தூர்பேட்டையைச் சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக இந்தக் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்து தீர்வு கண்டுவருகிறார்கள். அப்படிப்பட்ட இந்தக் காவல் நிலையம் முன்பு நேற்று (28.06.2021) ஒரு போதை மனிதர் ரகளையில் ஈடுபட்டு தரையில் படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து விசாரித்தபோது, உளுந்தூர்பேட்டை அரசு தொழில்நுட்பக் கல்லூரி எதிரே அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது அந்தப் பேருந்தில் பயணம் செய்துள்ளார் போதை இளைஞர் ஒருவர். அவர் அந்தப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதோடு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்தப் பேருந்து ஓட்டுநர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கீழே இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் போதை இளைஞர் காவல் நிலையம் முன்பு தான் அணிந்திருந்த பேண்ட் சட்டையைக் கழட்டிவிட்டு அரை நிர்வாணத்துடன் ரகளையில் ஈடுபட்டதுடன் தரையில் உருண்டு புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

 

அதோடு அங்கிருந்தவர்களை அருவருப்பான வார்த்தைகளால் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவரது செயலைக் கண்டு பெண் காவலர்கள் உட்பட பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அனைவரும் மிகவும் அச்சமடைந்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் விரைந்து வந்து அந்தப் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். போலீசார் போதை ஆசாமியைக் கைது செய்ததில் அந்த வாலிபர் சென்னை மாநகர அரசு பேருந்தில் நடத்துனராக பணி செய்துவரும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்