அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தலுக்காக அ.தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துகிறார் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (27/01/2021) வருகை தந்த ஜி.கே.வாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் விமர்சனம் செய்துள்ளார். இது தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் பேசப்பட்டது. ஒரு அகில இந்திய தலைவர் வரும்போது அந்தந்த மாநிலத் தலைமை மற்றும் மாவட்ட தலைமை இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். எனவே, அவர் வரும் போது அதிக கூட்டம் சேர்ந்தது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல. மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்குத் தீர்வுகான பலமுறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலரின் தூண்டுதலால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர். குடியரசு தினத்தன்று நாட்டின் மதிப்பை பாதிக்கும் வகையில் சில சமூக விரோத சக்திகள் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டன. இது கண்டிக்கத்தக்கது. ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதில் சுமூக தீர்வு ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தி.மு.க. தலைவர் தேர்தலுக்கு மூன்று மாதம் இருக்கையில் மக்களிடமிருந்து குறைதீர்ப்பு மனுக்களைப் பெற உள்ளதாகக் கூறியுள்ளது, வாக்காளர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் நாடகமாக மக்கள் கருதுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைத்ததை வரவேற்கிறேன். சசிகலா விடுதலை எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சி நிர்வாகிகள் விடியல் சேகர், சந்திரசேகர், இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.