/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_2.jpg)
வாழப்பாடி அருகே, மகன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் உள்ளிட்ட மூன்று பேர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி பிரவீணா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வெங்கடேஸ்வரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வடமாநிலங்களுக்கு லாரியை ஓட்டிச்சென்றால், திரும்பி வர 10 நாள்களுக்கு மேல் ஆகும். கணவருடைய தந்தை பச்சமுத்து, தாயார், தனலட்சுமி ஆகியோரும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
மகன் ஊரில் இல்லாத நேரங்களில் மருமகளிடம் மாமனார் பச்சமுத்து சில நேரம் தவறாக நடக்க முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பிரவீணாவிடம் அவருடைய மாமனார் மீண்டும் தவறாக நடக்க முயன்றார். தந்தை ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொள்ளலாமா? என பிரவீணா, மாமனாரை திட்டியுள்ளார். கோபம் அடைந்த பச்சமுத்து, தனது ஆசைக்கு இணங்காததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியே போ என விரட்டியுள்ளார். மேலும், மருமகளை தாக்கியுள்ளார்.
வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தன் கணவரிடம், வீட்டில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைச் சொல்லி பிரவீணா அழுது புலம்பியுள்ளார். ஆனால் கணவரும், மாமியாரும் பச்சமுத்துவை கண்டிக்காமல் இருந்ததோடு, அவரின் நடத்தையை விமர்சனம் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீணா, மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தை, தன்னுடைய தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். அவரும் நேரில் வந்து விசாரித்தபோது, அவரையும் பச்சமுத்து ஆபாசமாக திட்டி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து பிரவீணா, வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் பச்சமுத்து மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக உள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)