வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.
கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.
இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.
இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.