பழங்குடி சமூகமான தோடர் இனத்திலிருந்து முதன்முறையாக ஒரு இளம் பெண் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆகியிருக்கிறார். இந்தச் சம்பவம் தோடர் இனத்துக்கே பெருமை சேர்த்துள்ளதாக அவரது கிராமமே கொண்டாடி மகிழ்கிறது. தென்னிந்தியாவின் பழங்குடி இனங்களில் மிக முக்கியமானது தோடர் இனம். இவர்களுக்கென பிரத்தியேகமான மொழி உண்டு.
ஆனால், அந்த மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அதனால் இந்தியாவில் அழிந்து வரும் மொழிகளில் தோடர் இன மொழியும் இருப்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டும் என இந்திய அரசுக்குத் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை செய்துவருகிறது ஐ.நா.சபை. இந்த வலியுறுத்தலின் பேரில், தொடர்ந்து அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவைகளை ஆவணப்படுத்தவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி மலைப்பிரதேசத்தில் சுமார் 8,000-த்திற்கும் அதிகமான தோடர் இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் அந்த இன மக்களின் குழந்தைகள் சமீபகாலமாக கல்வி அறிவு பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் தவிட்டுக்கோடு மந்து கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்கிற இளம்பெண் முதன்முறையாக சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த நந்தினி, சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞர் பயிற்சி பெற பதிவு செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மந்து கிராமப் பகுதியில் உள்ள தோடர் இனத்தினர் நந்தினியை கொண்டாடி மகிழ்கின்றனர். இதனை அறிந்து, ‘விடா முயற்சியுடனும் கடுமை உழைப்புடனும் சட்டப்படிப்பை முடித்திருக்கும் தோடர் இனத்தின் முதல் பெண் வழக்கறிஞருக்கு வாழ்த்துகள்’ என நந்தினியை வாழ்த்தியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றுள்ளார் நந்தினி. இது குறித்துப் பேசிய நந்தினி, “அரசு உதவி பெறும் பள்ளியில் தான் பள்ளிக்கூட படிப்பை முடித்தேன். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். அதன்படி, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தேன். தோடர் இனத்தில் முதல் முறையாக சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பணியில் சேர்வது நான்தான். வக்கீல் பணியில் சமூகத்திற்கு நல்லது செய்வேன்” என்று கூறுகிறார்.