![No love eye ... Run with teenage boyfriend with baby!](http://image.nakkheeran.in/cdn/farfuture/kGmX7D3xIvnNz1-5icONQq_iG9GzVLLLweipR6Ad97A/1653358439/sites/default/files/inline-images/salem3232323.jpg)
சேலம் அருகே, 6 மாதத்தில் நெருங்கிப் பழகத் தொடங்கிய ஆண் நண்பருடன், தனது கைக்குழந்தையோடு இளம்பெண் மாயமானார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்தவர் மேரி (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், விசைத்தறி தொழிலாளி ஒருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மேரி, மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக இடைப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
ஆறு மாதங்களாகியும் மேரி, கணவர் வீட்டுக்கு வரவில்லை. மே 12- ஆம் தேதி, மேரியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று விட்டனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மேரியையும், கைக்குழந்தையையும் காணவில்லை. அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் தகவல் ஏதும் இல்லை.
வீட்டில் மேரியின் செல்போன் மட்டும் இருந்தது. அதில் பதிவாகியிருந்த எண்களை வைத்து ஆய்வு செய்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த தினேஷ் (வயது 28) என்ற வாலிபருடன் அடிக்கடி மேரி பேசி வந்திருப்பதும், வாட்ஸ்அப்பில் அந்தரங்கமான விஷயங்களை பகிர்ந்து வந்திருப்பதும் தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த மேரியின் பெற்றோர், இடைப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், தினேஷூம் மேரியும் பேஸ்புக் மூலம் நட்பாக பழகத் தொடங்கியதும், கடந்த ஆறு மாத காலம் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் இருந்தபோது மேரி, அந்த வாலிபருடன் நெருங்கிப் பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.