தமிழ்நாட்டில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து மாணவர்களும்,பெற்றோர்களும் கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய அரசு எதைச் சொன்னாலும் தலையாட்டுகிறது தமிழக அரசு என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது சின்னக் குழந்தைகளின் கல்வியில் கை வைப்பதையும் ஏற்க முடியாது என்று கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் போராட்டமாக புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை கல்வியாளர்கள், அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு அமைப்பினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை கல்வி அதிகாரியிடம் மனுவாக கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையானது,
பள்ளிக் கல்வித்துறையில் பெற்றோர் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் என எந்த தரப்பினரையும் ஆலோசிக்காமல் மாணவர்களை பாதிக்கிற வகையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை இந்த ஆண்டே நடைமுறை படுத்தப்பட வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளோடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஏற்கனவே தனித்தனி பாடங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை பணி நிரவல் என்ற அடிப்படையில் அந்த பாடத்தை போதிக்க கூட ஆளில்லாமல் எங்களது பிள்ளைகள் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களை கைவிட வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவியல் உபகரணங்கள் மாணவர்கள் எண்ணிக்கையைப்பொறுத்து ரூபாய் எழுபதாயிரம் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகிய எந்த விவரங்களும் குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இதனால் எங்களது பிள்ளைகளுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ என அஞ்சுகிறோம். மேலும் இந்த பொருட்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக பில் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து நீதி விசாரணை செய்திடவேண்டும் என்பதற்காகவும், புதிய கல்விக் கொள்கை இறுதி வடிவம் பெறாத நிலையில் அதிலுள்ள சரத்துக்களை அவசரகதியில் தமிழக அரசு அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்குழுவினர் கூறினார்கள்.
போராட்டத்தில் புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அந்த போராட்டம் மாநில அளவில் நடத்தப்படும் என்றும் கூறினார்கள்.