கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் துணையோடு வளமாக இருந்த பலரும் தற்போது பாதுகாப்புத் தேடி பாஜகவில் இணைந்து வருவது வழக்கமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டில் கொடிகட்டிப் பறந்த ஒருவர் கடந்த ஆண்டு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பாஜகவில் இணைந்து தற்போது பெரிய ஒப்பந்தக்காரர் ஆகியுள்ளார்.
அதேபோல கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய அமைச்சர் வேலுமணியின் துணையோடு எல்இடி பல்பு உட்பட பல ஒப்பந்தங்களைப் பெற்று அமைச்சரின் பினாமியாக செயல்படுவதாகச் சொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஏ.டி பஞ்சாயத்து கிளார்க் முருகானந்தம், புதுக்கோட்டை நகரில் வாங்கிய வணிக வளாகம் உட்பட பல கோடி சொத்துக்கள் உள்ளதால் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ந் தேதி கடுக்காகாடு வீடு உள்பட பல இடங்களில் விஜிலென்ஸ் சோதனையும் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆளும் கட்சியினரை சரி செய்து சத்தமின்றி இருந்தார். அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்படலாம் என்ற நிலையில்தான் நேற்று பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்து தன்னை பாஜக உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் பாஜகவிடம் அடைக்கலமாகி வருகிறார்கள். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இதுபோன்றவர்களை தன் கட்சியில் இணைத்துக் கொண்டுதான் ஊழல், முறைகேடுகள் பற்றியெல்லாம் பொதுவெளியில் பேசி வருகிறார் என்கிறார்கள் விவரமறிந்த பலரும்.