புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சின்னப்பிள்ளை. இவர்களுக்கு முத்துக்கருப்பன், முருகன் என 2 மகன்கள் உள்ளனர். 2014ஆம் ஆண்டு சண்முகம் இறந்துவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூர் பகுதியில் 1.68 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்துவருகின்றனர். மேலும், இங்கேயே வீடு கட்டி குடியிருந்துவருகின்றனர். இதில் மூத்த மகன் முத்துக்கருப்பன், விராலிமலை முருகன் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளராக பணியாற்றிவருகிறார்.
இவரது மனைவி கற்பகம். கடந்த 2017ஆம் ஆண்டுக்கு முன்பு விராலிமலை அருகே விருதாப்பட்டி கிராமம் செளரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மருதை என்பவரது மகன் முத்துப்பழனி என்பவரிடம் முத்துக்கருப்பன், கற்பகம், சின்னப்பிள்ளை ஆகியோர் சிறுகச் சிறுக 2 லட்சம் ரூபாய்வரை கடன் பெற்றுள்ளனர். குலதெய்வம் கோவில் கட்டுவதற்காக இந்தத் தொகையை அவர்கள் சிறுகச் சிறுக வாங்கியுள்ளனர். இந்தத் தொகைக்கு அத்தாட்சியாக 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு சொந்தமான நிலத்தை 3 லட்சம் ரூபாய்க்கு கிரையம் செய்ததாக முத்துப்பழனி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் அசல் உட்பட வட்டியுடன் சேர்த்து மூன்று லட்ச ரூபாய்க்குப் பத்திரம் எழுதியுள்ளார். பணத்தைக் கொடுத்தவுடன் பத்திரத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக முத்துப்பழனி உறுதியளித்துள்ளார்.
இதை நம்பி முத்துக்கருப்பன் குடும்பத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்று முத்துப்பழனி, முத்துக்கருப்பன் குடும்பத்தினரை மிரட்டிவருவதாக புகார் எழுந்துள்ளது. முத்துப்பழனி தனது ஆதரவாளர்களுடன் சென்று, முத்துக்கருப்பன் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் முத்துக்கருப்பன் குடும்பத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களாக வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையென்றால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று முத்துப்பழனி நெருக்கடி கொடுத்துவருகிறார். இதுகுறித்து புதுக்கோட்டை டி.ஆர்.ஓ.விடம் புகார் மனு அளிக்க முத்துக்கருப்பன் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
முத்துப்பழனி கல்வியறிவு இல்லாத ஏழை மக்களுக்கு கடனாக பணம் கொடுத்து, பலரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி சொத்து மற்றும் வாகனங்களை எழுதி வாங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இவர் மீது கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டது, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து முத்துக்கருப்பன் கூறுகையில், “கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலம் எங்களுக்கு சொந்தமாக உள்ளது. 4வது தலைமுறையாக இந்த சொத்தை நாங்கள் அனுபவித்துவருகிறோம். இந்த நிலையில், கடன் கொடுத்த பணத்துக்குப் பதிலாக எங்களது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முத்துப்பழனி எங்களை மிரட்டிவருகிறார்.
இதுபோல் பலரது சொத்துக்களை அவர் ஏற்கனவே அபகரித்துள்ளார். அதேபோல் வாகனங்களின் பெயர்களிலும் கடன் கொடுத்துவிட்டு, அதிக வட்டி வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வட்டி செலுத்த முடியாதவர்களை அடித்து உதைத்து வாகனங்களை அபகரித்துள்ளார். சிறுகச் சிறுக இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, தற்போது பல்வேறு வட்டி விகிதங்களைக் கூறி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று எங்களை மிரட்டிவருகிறார். ஆகையால் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து எங்களது பூர்வீக சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் முத்துப்பழனி மீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.