கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே நேற்று சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
தொடர்ந்து எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதிக்கு மேலே எந்த ஒரு மின் கம்பிகளும் இல்லாமல் இருப்பதை இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து பணிகளை தீவிரப்படுத்தினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்த நிலையில் சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்கு பின் டேங்கர் அங்கிருந்து அகற்றப்பட்டது. விபத்து நடந்த அந்த பகுதியைச் சுற்றியுள்ள 35க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
கொச்சியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரியை கோவை அவினாசி மேம்பாலத்தில் கவிழ்த்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை நள்ளிரவில் கைது செய்த போலீசார், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.