Skip to main content

வாயுக்கசிவு; ஆலை நிர்வாகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
gas leakage; Pollution Control Board orders for plant management

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலைக்கு, துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, ‘எண்ணூரில் ரசாயன ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட காரணமான பைப் லைனில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராம்/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா 2090 மைக்ரோ கிராம்/m3 ஆகவும், கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்தை இன்றைக்குள் கண்டறிந்து சரிசெய்யப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அமோனியா கசிவு ஏற்பட்ட குழாயை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உடைப்பை சரிசெய்த பின் கடல்சார் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்