2018 ம் ஆண்டு நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கிறது என்று வானிலை அறிவிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை அடுத்தடுத்து மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கி 11 மணிக்கு பிறகு லேசான காற்றும் வீசத் தொடங்கியது. 12 மணிக்கு பிறகு வீசிய காற்றில் கடல் காற்றின் வாசனையை உணர்ந்தார்கள் உள்மாவட்டத்தில் உள்ள மக்கள். வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்தனர். வழக்கம் போல புயல் அறிவிப்பு வரும், பிறகு வலுவிழந்து போகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.
1 மணிக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரிகத் தொடங்கியதும் தான் மக்களுக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்து காற்றின் வேகம் அதிகரித்து தென்னை மரங்கள் மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. நீண்ட நேரம் சாய்ந்தும் உயர்ந்துமாக எழுந்த தென்னை மரங்கள் வேரோடு சாயத் தொடங்கியது. அடுத்தடுத்து மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் என்று அத்தனை மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல வீடுகளில் மரங்கள் விழுந்தது. பல உயர்கள் பறிபோனது. ஆடுகள் தண்ணீர் அடித்துச் சென்றது. விடியும்போது கஜாவின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்து காணப்பட்டது புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்.
மீனவர்களின் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல வழியில்லை முழுமையாக மரங்கள் விழுந்து கிடந்தது. உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் சாலைகள் சீரமைக்கப்பட்டு குடிதண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுத்த நிவாரணப் பொருட்கள் பல நாட்கள் உதவியது மக்களுக்கு. அதன் பிறகு மின்கம்பங்களை சீரமைக்க இளைஞர்களை கொண்டே சீரமைக்கப்பட்டது.
தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை கொண்டு வந்த கொடுப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெடுவாசலில் நின்று சொல்லிவிட்டுப் போனார் ஆனால் இதுவரை ஒரு தென்னங்கன்று கூடவரவில்லை. அதேபோல வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொன்னதோடு சரி புயல் நிவாரண வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
புயல் தாக்கி இரண்டு வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையிலும் கூட இழப்பீடுகளும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் அரயப்பட்டி பகுதியில் குடிதண்ணீர் எடுக்கச் சென்று மின்சாரம் தாக்கி இறந்த 2 பேருக்கு புயல் நிவாரணம் மற்றும் அரசு வேலை கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தும் இன்றுவரை எந்த நிவாரணமும் அந்தக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் தென்னை, பூ விவசாயிகள் இன்னும் பழைய நிலையை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலையை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் விவசாயிகள்.