![temples foods fund released tamilnadu minister order](http://image.nakkheeran.in/cdn/farfuture/7bb-1DheYvZYdo9J5_GtlH37VLxLyQD06MSLg2Fq8P4/1622103974/sites/default/files/inline-images/sekar%20%281%29.jpg)
அன்னதானத்திட்ட மைய நிதியில் இருந்து 349 கோயில்களுக்கு ரூபாய் 2.51 கோடியை ஒதுக்க தமிழக இந்து மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா தொற்று நோயினால் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து, அன்றாட வாழ்க்கைக்குப் போராடிவரும் நிலையில், அவர்களது பசியினைப் போக்கும் விதமாக திருக்கோயில்களில் இருந்து உணவுப் பொட்டலங்களை உணவு தேவைப்படுவோருக்கு வழங்கிடுமாறு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் ஏற்கனவே ஆணையிடப்பட்டது.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி திருக்கோயில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு உணவுப் பொட்டலங்களாக நாள்தோறும் ஏழை எளியோருக்கு 12/05/2021 முதல் வழங்கப்பட்டு, பொது மக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டமாக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 05/06/2021 வரை உணவுப் பொட்டலங்களை வழங்கிட திருக்கோயில் நிர்வாகங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. இச்சேவையினை தொடரும் நிலையில் 349 திருக்கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், திருக்கோயில்களுக்கு இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தினை கணக்கிட்டதில் ரூபாய் 2 கோடியே 51 லட்சத்து 07 ஆயிரத்து 647 தேவைப்படுகிறது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உணவு தேவைப்படுவோருக்கு திருக்கோயில்கள் வாயிலாக உணவுப் பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்கிடத் தேவைப்படும் நிதியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டுவரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.