இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் மக்கள் அதிகார அமைப்பின் சார்பில் அஞ்சாதே போராடு என்ற தலைப்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் உழவர் சந்தையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா பேசுகையில், "1949இல் அரசியலமைப்பு பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது உரிமை என்பது மதம் அடிப்படையில் இருக்க முடியாது என்று தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது. குடியுரிமையை கேள்விக்குறியாக்கி, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் செயலை தான் தற்போது உள்ள மத்திய அரசு செய்து வருகிறது.
குறிப்பாக ஆறு மதங்களை குறிப்பிடுவதுடன், முஸ்லிம் உள்ளிட்ட சில சிறுபான்மை மதங்கள், சில சமயப் பிரிவுகள் சில நாடுகள் ஆகியவற்றை விலக்குகிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14 ,15 பிரிவுகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன.

மக்களுக்கு எதிராக மக்களுக்கு, மதத்திற்கு எதிராக மதத்திற்கு, மதம் குழுவுக்கு எதிராக மதக்குழுவிற்கு சலுகை அல்லது பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் ஏற்காது. தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப் படுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 5, 11, 14,15, 17, 19, 21 ஆகியவற்றின் படி பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மூலம் நமது உரிமைகளை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை இந்த மத்திய அரசு மீற முடியாது.
குடியுரிமை திருத்த சட்ட விதிகள் கள்ளக் குழந்தை என்று சொல்ல முடியாது. தாய் தந்தை இல்லாத அனாதை குழந்தைகள் போன்று இவ்விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் இந்த சட்டம் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்லாது அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.
பொதுமக்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும். போராட்டத்திற்கு காவல்துறையினர் தங்கள் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுக்க வேண்டும் நீங்கள் அனுமதி கொடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் அனுமதி வழங்கப்படும். நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துவிட்டது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த என்ன அவசியம்" என்று கொதித்தெழுந்தார்.
ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் திரள் வெள்ளத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பாலன், திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி , தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாய் பாலாஜி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.