
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளோடு இன்று (11.05.2025) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி முப்படை தளபதிகளோடு மேற்கொண்ட 3வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
இதில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் இருந்து வரும் தாக்குதல்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தாங்கள் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்ற கருத்தை மோடி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்று காலை சமூக வலைத்தள பக்கமான 'எக்ஸ்' பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில் 'நீண்ட நெடுநாள் பிரச்சனையாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனையை நாங்கள் நடுவில் இருந்து தீர்த்து வைக்க தயாராக உள்ளோம்' என தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக 'மூன்றாவது நாடு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்' என காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது கேள்வியாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி பேசுகையில், 'பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக இருந்தால் அந்நாட்டுடன் பேசுவோம். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உடன் பேச வேற எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவது குறித்து தெளிவான நிலைப்பாடு எங்களிடம் உள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும். சிந்து நதிநீர் ஒப்பந்தம் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்தம் நிறுத்தப்படும். காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை' என தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.