Skip to main content

மூதாட்டி மர்ம மரணம்; கம்மல், முதியோர் உதவித் தொகைக்காக கொலையா?-போலீசார் விசாரணை

Published on 11/05/2025 | Edited on 11/05/2025
Elderly woman lose their live - earring and old age pension missing

                                                                      கோப்புப்படம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகண்டை கூட்டுச்சாலை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது சின்ன கொள்ளியூர் கிராமம். இந்த கிராமத்தில் தனியாக வசித்து வருபவர் சின்னப்பொண்ணு (78).  இன்று காலை அவருக்கு உணவு வழங்குவதற்காக வந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மூதாட்டி சின்னப்பொண்ணு வாயிலிருந்து ரத்தம் வெளியேறியவாறு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் மகன் வெங்கடேசன் என்பவர் தனது தாயார் சின்ன பொண்ணு காதில் 3/4 சவரன் தங்கத்தினாலான கம்மல் அணிந்திருந்ததாகவும் தற்போது அது இல்லை என கூறியுள்ளார். அதேபோல் முதியோர் உதவித்தொகை மூலமாக வைத்திருந்த 3500 பணமும் காணாமல் போய் உள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தோட்டத்து வீடுகளை குறிவைத்து முதியோர்களை கொலை செய்து அங்கு இருக்கும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கொள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்