
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளோடு இன்று (11.05.2025) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி முப்படை தளபதிகளோடு மேற்கொண்ட 3வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இதில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் இருந்து வரும் தாக்குதல்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியில் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினல் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் புரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களில் எங்கெல்லாம் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தும், பயங்கரவாதிகளின் முகாம்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.

'பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்கள் குடும்பத்தினர் அனுபவித்த வலிக்கு ஒட்டுமொத்த தேசமும் சாட்சியாக நிற்கிறது. முரிட்கே, பாகல்பூர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் தாக்குவது எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. பாகிஸ்தான் இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. சரியாக குறி வைத்து முரிட்கே பயங்கரவாத பயிற்சி மையத்தில் நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் தவிர வேறு எந்த கட்டமைப்பையும் இந்தியா தாக்கவில்லை. மே 8, 9 ஆகிய தேதிகளில் எல்லை நகரங்களில் பல ட்ரோன்கள் தாக்க வந்தன. அதனால் நாம் தயாராகவே இருந்தோம். இந்திய நிலைகள் மீதான அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் நாம் வெற்றிகரமாக முறியடித்தோம்.

'ஆப்ரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம். எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டை மீறி குருத்வாரா, கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நமது விமானப்படை தயாராக இருந்தால் ட்ரோன் தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஸ்பூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தோடு 'ஆபரேஷன் சிந்தூர்' வடிவமைக்கப்பட்டது. தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நமது நாட்டைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்களும் பொதுமக்களும் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர். பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்.இந்தியா ராணுவத்தின் வேலை இலக்கை தாக்குவது தான். சடலங்களை எண்ணுவதல்ல.

நாம் தொடுத்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவையெவை என்பதை பற்றி சொல்லவில்லை. நாம் என்ன வழிமுறைகளை பயன்படுத்தினோமோ அதற்கு விரும்பிய பலனை நாம் பெற்றுள்ளோம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் சண்டை பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை பயங்கரவாதிகளுடன் மட்டுமே. இன்று இரவும் நாங்கள் காத்திருப்போம். அத்துமீறி பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுப்போம். பதில் தாக்குதல் உரிய தண்டனையாக இருக்கும்' என்றனர்.